பில்லும் வரவில்லை.. மாற்றமும் இல்லை.. டாஸ்மாக் மதுப்பிரியர்கள் அதிருப்தி..!
டாஸ்மாக் மது கடைகளில் பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பில் சரியாக வழங்கப்படுவதில்லை என்றும் கூடுதல் தொகை பெறுவதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மதுப்பிரியர்கள் அதிருப்தியுடன் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் க்யூஆர் கோடு முறையில் பில் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு 15 நாட்களாகி விட்டது. ஆனால், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகும், பில் சரியாக கொடுக்கப்படுவதில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறு என கூறி டாஸ்மாக் ஊழியர்கள் பில் வழங்குவதில்லை என்றும் அது பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பில் வழங்கினாலும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மது பாட்டில்கள் கூடுதலான விலையில் விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பில் கட்டாயம் கேட்பவர்களை 5 முதல் 10 நிமிடங்கள் காக்க வைக்கப்படுகிறார்கள் என்றும் இதனால் வாடிக்கையாளர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதாய் கூறப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு பில் வந்தாலும், ஊழியர்கள் கேட்பது அதிக தொகையாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் குறை கூறுகின்றனர். "க்யூஆர் கோடு முறையால் பில் வந்தால் எல்லாம் சரியாகிவிடும்; அதிக தொகை கேட்பதில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், பில்லும் வரவில்லை, மாற்றமும் வரவில்லை," என்று மதுப்பிரியர்கள் தெரிவித்தனர்.
Edited by Mahendran