தொழில்துறைக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலங்கள் என மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டின் பெயர் இடம்பெறவில்லை.
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், நாடு முழுவதும் தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்கியுள்ள மாநிலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
தொழில்துறை மற்றும் குடிமக்கள் சேவை, பயன்பாட்டு அனுமதி வழங்குதல், ஆன்லைன் ஒற்றை சாளர முறை, சான்றிதழ் விநியோகம் செயல்முறையை எளிமைப்படுத்துதல், சிறந்த பொதுவிநியோக கட்டமைப்பு, சிறந்த போக்குவரத்து, வேலைவாய்ப்பு பரிமாற்ற செயல்பாடுகள் உள்ளிட்ட பல காரணிகளை ஆராய்ந்து இந்த தரவரிசை பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் தொழில்துறை கட்டமைப்புக்கு சிறந்த மாநிலமாக முதல் இடத்தில் கேரளா தேர்வாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆந்திராவும், மூன்றாவது இடத்தில் குஜராத்தும் உள்ளன. தொடர்ந்து ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பெயர் கடைசியில் கூட இடம்பெறவில்லை. தொழில் சார்ந்த ஜிஎஸ்டி வருவாயில் தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில், தொழில்துறைக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டின் பெயர் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K