இன்று குடியரசு தினத்தில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை தவெக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று நாட்டின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதுபோன்ற அரசு விழா நாட்களில் கவர்னர் மாளிகையில் மாநில கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு தேநீர் விருந்து வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சமீபமாக ஆளும் திமுக, கவர்னர் இடையே உள்ள உரசல் காரணமாக திமுக மற்றும் தோழமை கட்சிகள் இந்த விருந்தில் பங்கேற்பதில்லை.
இன்று தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வந்த அழைப்பை நிராகரித்துள்ளன திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் விஜய் கவர்னர் ஆர்.என்.ரவியை நேரடியாக சந்தித்திருந்தார்.
இதனால் இந்த தேநீர் விருந்தில் விஜய் பங்கேற்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது விஜய்யும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கவர்னர் பல விழா மேடைகளில் சனாதனத்தை ஆதரித்து பேசி வரும் நிலையில் தேநீர் விருந்தில் பங்கேற்பது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானத் தன்மையை உருவாக்கக் கூடும் என்றும், மேலும் வரும் தேர்தல்களில் இது சிலருக்கு சாதகமாக அமையக் கூடும் என்பதாலும் அவர் புறக்கணிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K