வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (11:43 IST)

காங்கிரஸ் மூலம் பாமகவுக்கு தூது விடுகிறதா திமுக ? – அதிர்ச்சியில் வி.சி.க !

நாங்கள் இருக்கும் கூட்டணியில் பாமக இடம்பெறாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில் பாமக வோடுக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. அதுபோல அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக அடங்கியக் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் பாமக அதிமுக கூட்டணியை விட வலுவான திமுக கூட்டணியில் சேரவே முதலில் ஆர்வம் காட்டியது.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன், பாமக இருக்கும் கூட்டணியில் இனி ஒருநாளும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என அறிவித்துள்ளதால் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது கடினம் என கூறப்பட்டது. திமுக தலைமைப் பாமகவை விரும்பாத நிலையிலும் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாமக கூட்டணியில் இருந்தால் வட மாநிலங்களில் வன்னியர் சமுதாய ஓட்டுக்களை முழுமையாகக் கைப்பற்றலாம் எனத் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் புதிதாக செயல்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு பிரசாத் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் ஆவார். இவர் தனது அக்காக் கணவர் என்ற உரிமையோடு அன்புமணியிடம் திமுகக் கூட்டணியில் இணைவது குறித்துப் பேசி வருவதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தைத் திமுக தலைமையின் ஒப்புதலோடு நடந்ததா அல்லது தன்னிச்சையான ஒன்றா எனத் தெரியவில்லை.

ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து திமுகவும் பாமகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் என்ன செய்வது என்ற அதிர்ச்சியில் விசிக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் திருமா வளவன் பேச இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.