எம்ஜிஎம் குழுமம் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய சென்னை, நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வருமான வரித்துறையினர் அவ்வப்போது பல நிறுவனங்களில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் எம்ஜிஎம் குழுமத்திற்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
எம்.ஜி.எம்.குழுமம் ரியல் எஸ்டேட், மதுபான தொழிற்சாலை, நட்சத்திர ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்த நிலையில் இந்த குழுமம் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது வருமானத்தை மத்திய அரசுக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய சென்னை, நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டு தீவுகளில் உள்ள முதலீடுகள் குறித்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தவிர ரொக்க பணம், தங்க நகைகள் ஆகியவற்றின் கணக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.