திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:36 IST)

பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் 5 ஆண்டுகளுக்கு சினிமா சான்ஸே கிடையாது! - தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி முடிவு!

South Indian Actors association

மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல்களை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

 

 

நேற்று தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

அதில் தமிழ் சினிமாவில் பாலியல் வன்கொடுமை புகார்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, பாலியல் வன்கொடுமை குறித்து பாதிக்கப்பட்டவர் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்பட்டு, புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு திரைத்துறையில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்படுவார்கள். இதற்காக தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பரிந்துரை செய்யப்படும்.
 

 

பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது தொடங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் செய்து கொடுக்கும்.

 

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை அளிக்க தனி தொலைப்பேசி எண் ஏற்கனவே உள்ளது. தற்போது இமெயிலும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளிக்கவும், மீடியாக்களில் பேசுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

அதுபோல யூட்யூபில் திரைத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தை அவதூறாக பேசுபவர்கள் மீது சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை கமிட்டி தரும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K