திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (13:18 IST)

போயஸ்கார்டன் வீடு எனக்கு வேண்டாம் - தினகரன் ஓபன் டாக்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தை கைப்பற்ற நான் முயற்சிக்கவில்லை என அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த 11ம் தேதி காலை தீபா, ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரின் சகோதரர் தீபக்கும் இருந்தார். ஆனால், தன்னை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும், அங்கு காவலுக்கு இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் தன்னை தாக்கியதாகவும் தீபா புகார் கூறினார். மேலும், சசிலாவோடு சேர்ந்து கொண்டு தனது சகோதரர் தீபக் சதி செய்கிறார் எனவும், அவர்தான் தன்னை அங்கு வர சொன்னதாகவும் கூறினார். 
 
அதுமட்டுமில்லாமல், தனது அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் எனவும், அதை சசிகலா மற்றும் தினகரன் தரப்பு பறிக்க முயல்வதாகவும் புகார் கூறினார். அதன் பின் ஒருவழியாக போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


 

 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தினகரன் “ஜெ. வாழ்ந்து வந்த அந்த வீடு எங்களுக்கு கோவில் போன்றது. அவர் எங்களுக்கு தெய்வம் போன்றவர். அவரது சொத்தை கைப்பற்ற நான் யார்?. அந்த வீடு அவரின் ரத்த வாரிசுகளுக்கு மட்டுமே சொந்தமானது. அப்படி இருக்கும் போது, தீபா என் மீது ஏன் புகார் தெரிவிக்கிறார் எனத் தெரியவில்லை. அவர்தான் ஜெ.வின் சட்டப்படியான வாரிசு என்பதை நிரூபித்து அவரின் சொத்துகளை பெற்றுக்கொள்ளலாம். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என அவர் தெரிவித்தார்.