வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (10:41 IST)

காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானை - பிடிக்க போராட்டம்!

காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடித்து கூண்டுக்குள் அடைக்கும் பணிகளுக்காக முதுமலையில் கிரால் கூண்டு அமைக்கும் பணிகள் தீவிரம்.
 
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரை ஒட்டிய சில்வர் கிளவுட், கோக்கால், மேல்கூடலூர், அல்லூர் வயல், ஏழு முறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வால் பகுதியை ஒட்டிய தொடைப்பகுதியில் காயத்துடன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சுமார் 35 வயது மதிப்புள்ள ஆண் யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த யானைக்கு தொடர்ச்சியாக வனத்துறையினர் பலாப்பழம் உள்ளிட்ட பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையுடன் வழங்கி வருகின்றனர். 
 
இந்த யானை அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்கும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை விளைவிப்பதோடு பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இதனை மயக்க ஊசி போட்டு பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். யானையின் உடலில் உள்ள காயம் காரணமாக அந்த யானை ஆக்ரோசத்துடன் இருப்பதாகவும், அவ்வப்போது யானயை கண்காணிக்கவும், பழங்களில் மருந்து மாத்திரைகள் வைத்து அருகில் செல்லும் வழியிலேயே யானை விரட்டி வருவதாகவும் இந்த யானையின் உடல் நிலை மோசம் அடைவதற்கு முன்பாக இதனை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த யானை தனியார் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிகிறது. இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் யானையை கண்காணித்து ஆய்வு மேற்கொண்டனர். கோவை கால்நடை மருத்துவர் சுகுமாரன் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் அடங்கிய மருத்துவ குழுவினரின் ஆலோசனைப்படி தொடர்ந்து யானைக்கு வனத்துறையினர் பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து வழங்கி வருகின்றனர். யானையை முதுமலையில் உள்ள கிரால் கூண்டில் அடைத்து சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக அபயரண்யம் முகாம் பகுதியில் புதிதாக கிரால் கூண்டு அமைக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 
கூண்டு அமைக்கும் பணி நிறைவடைந்ததும் யானைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்துச் சென்று காயத்திற்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குணமடைந்ததும் மீண்டும்  யானை வனப்பகுதியில் விடப்படலாம் அல்லது யானையின் உடல் நிலையைப் பொருத்து தொடர்ந்து முகாமிலேயே பராமரிக்கலாம் என்பது குறித்து உயர் அதிகாரி உத்தரவுப்படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.