திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (16:30 IST)

எவ்வளவு காலம் ஆய்வு செய்வீர்கள்.! சட்டப்பேரவை நேரலை வழக்கில் நீதிமன்றம் கேள்வி..!

TN Assembly
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல்வேறு மாநிலங்களிடம் தகவல் கோரப்பட்டுள்ளதாகவும், முழுமைதாக தகவல்கள் கிடைத்த பின் இதுசம்பந்தமாக முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.
 
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரி தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
 
அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல மாநிலங்களிடம் தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை.  நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாக தகவல்கள் கிடைத்த பின் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 
இதையடுத்து, எவ்வளவு காலம் ஆய்வு செய்யப்படும் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்து, வழக்குகளின் விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்