வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (12:47 IST)

புத்தக பைகளில் கட்சி தலைவர்கள் படம் இருக்கக்கூடாது! – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் அரசு விநியோகிக்கும் புத்தகப்பைகளில் கட்சித் தலைவர்கள் படம் இடம்பெற கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகப்பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. இந்த பைகளை அகற்றும்படி வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் “முன்னாள் முதல்வர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுதுபொருட்கள் வீணாக்கப்பட மாட்டாது. அவை மாணவர்களுக்கு வழங்கப்படும். புத்தக பைகளில் படத்தை அச்சிடுவதை முதலமைச்சர் விரும்பவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிமன்றம் “பள்ளி மாணவர்களின் புத்தக பைகள் உள்ளிட்ட பொருட்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இனிமேலும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளது.