புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (11:48 IST)

நடவடிக்கை எடுக்குறதுக்குள்ள என்ன அவ்ளோ அவசரம்! – ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவின் மீதான விசாரணையில் நீதிபதிகள் ரஜினிக்கு எச்சரிக்கை அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிக்கு சொந்தமான திருமண மண்டபம் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. அதை அவ்வப்போது ரஜினி தனது ரசிகர்களை சந்திக்கவும் பயன்படுத்திக் கொள்வார். இந்நிலையில் இப்போது அந்த மண்டபத்துக்கான கடந்த 6 மாதத்துக்கான சொத்து வரியைக் கட்ட சொல்லி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் கடந்த சில மாதங்களாக மண்டபம் திறக்கப்படாததால் சொத்து வரியை குறைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு செப்டம்பர் 23ம் தேதி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவின் மீதான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மாநகராட்சிக்கு மனு அளித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்குள் நீதிமன்றத்தில் மனு அளித்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுபோன்று செயல்பட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறிய நீதிபதிகள் இதற்கு அபராதம் விதிக்கப்போவதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக கூறியுள்ளனர். ஆனால் ரஜினி தரப்பில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருப்பதாகவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டாமென்றும், தாங்களே வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் ரஜினி தரப்பில் தெரிவித்துள்ளனர்.