திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2016 (18:02 IST)

விவசாயியை தாக்கிய காவலர்கள் மீதான வழக்கு - தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

விவசாயிகளைதாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

 
சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், ”தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாலன் (40) என்பவர் டிராக்டர் கடன் தவணையை திருப்பிச் செலுத்தவில்லை என்று காவல்துறை அவரை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
 
அதுவும் ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்காக விவசாயி ஒருவரை காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். கடன் தொகையை வசூலிக்க வேண்டும் என்றால், நிதி நிறுவனம் அதற்கான சட்ட விதிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவேண்டும். அதற்காக காவல்துறையை கூலிப்படையை போல் பயன்படுத்தக் கூடாது.
 
விவசாயியை காவல்துறை தாக்கும் காட்சி இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது துறை ரீதியான மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை.
 
எனவே, விவசாயியை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்”என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், இந்த வழக்கை பாதிக்கப்பட்டவர் தாக்கல் செய்யவில்லை. மேலும் இந்த வழக்கை பொதுநல வழக்காக கருதமுடியாது. எனவே தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டுள்ளனர்.