இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் என்ற நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யோகி ஆதித்யநாத் பேசினார்.
அவர் பேசியபோது, "கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமம் ஆன திரிவேணி சங்கமத்தில் ஜாதி, மதம் பார்க்காமல் ஆறு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். இதில் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. சனாதன தர்மத்தை விமர்சனம் செய்பவர்கள் இதனை நேரடியாக வந்து பார்க்க வேண்டும்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
"சனாதன தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம். இது மனிதநேயத்தின் மதம். இங்கு வழிபாட்டு முறைகள் மாறுபட்டிருக்கலாம், ஆனால் மதம் ஒன்றுதான். அந்த மதம் தான் சனாதன தர்மம்," என்றும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நிலையில், அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கும்பமேளாவில் 11 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் 40 கோடி பக்தர்கள் புனித நீராட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva