இதற்குப் பெயர்தான் ஈ.வெ.ரா. எஃபக்டோ ? – வைரமுத்துவை வம்பிழுக்கும் ஹெச் ராஜா !
சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து திருமணம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சேரன் தனது அடுத்தப் படமான திருமணம் சில திருத்தங்களுடன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படம் திருமணம் குறித்த சமீபகால சிக்கல்களை அலசும் படமாக உருவாகியுள்ளது.
விழாவில் கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து ’திருமணம் என்பது சமீபத்திய நாகரீகம். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த திருமண உறவு என்பது பந்தப்படுத்ததும் சட்டபூர்வமாக்கப்பட்டதும் 3000 வருடமாகத்தான். அது இன்னும் 50 முதல் 100 ஆண்டுகாலம் வரை மட்டுமே இருக்கும். அதன் பின்னர் மனித குலம் வேறு ஒரு நாகரீகத்தை நோக்கி செல்லும். ’ எனக் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா இன்று ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘ஆமாம் அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உடை அணியாமல் காடுகளில் திரிந்தான். எதிர்காலத்தில் அப்படித்தான் திரிவானா மனிதன். இதற்கு பெயர்தான் ஈ.வெ.ரா effect ஓ.’ என நக்கலாகப் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து ஒருக் கருத்தை முன்வைத்தபோது ஹெச் ராஜா அவரைத் தரக்குறைவாகப் பேசியதும் அதன் பின்னர் பாஜக மற்றும் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் வைரமுத்துவுக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கியதும் குறிப்பிடத்தக்கது.