1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (10:50 IST)

தங்க புதையல் கிடைச்சிருக்கு.. நம்பிய வியாபாரிக்கு நாமம்! – கோவையில் ஒரு சதுரங்க வேட்டை!

கோவையில் தங்க புதையல் கிடைத்திருப்பதாக கூறி மளிகைக்கடை வியாபாரி ஒருவரை இரண்டு பேர் ஏமாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவர் அப்பகுதியில் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அடிக்கடி அப்பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் பொருட்கள் வாங்க வந்துள்ளனர்.

ஒரு நாள் சதாசிவத்திடம் பேசிய அவர்கள் தாங்கள் அருகில் உள்ள கல்லூரியில் படித்து வருவதாகவும், மீத நேரங்களில் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் ’ஒருநாள் அப்படி கூலி வேலை சென்ற இடத்தில் நிலத்தை தோண்டியபோது புதையல் ஒன்று கிடைத்தது. அதில் சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் உள்ளது. அதை உரிமையாளருக்கு தெரியாமல் கொண்டு வந்துவிட்டோம்.


அதன் மதிப்பு பல லட்சம் மதிப்பு போகும், ஆனால் நீங்கள் ரூ.10 லட்சம் தந்தால் உங்களிடமே மொத்த புதையலையும் கொடுத்து விடுகிறோம்’ என்று இனிக்க பேசியுள்ளனர். மளிகைக்கடைக்காரர் ஆதாரம் கேட்க தாங்கள் வைத்திருந்த செயினின் ஒரு பகுதியை கழற்றி கொடுத்துள்ளனர். அதை அவர் ஆராய்ந்ததில் உண்மையான தங்கம் என தெரிந்துள்ளது.

அதனால் ஆசையில் மயங்கிய அவர் ரூ.10 லட்சம் கொடுத்து அந்த புதையலை இளைஞர்களிடம் இருந்து வாங்கியுள்ளார். பின்னர் அதை சோதனை செய்தபோது அது அனைத்தும் பித்தளை என்று தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.