புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (11:35 IST)

சிறுவனை போல் உடையணிந்து சுக்கு டீ விற்கும் சிறுமி! – இதுதான் காரணம்?

கோப்புப்படம்
கிருஷ்ணகிரியில் 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஆண்பிள்ளை போல வேடமிட்டு டீ விற்பனை செய்து வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். முதல் பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்ட சூழலில், ஒரு பெண் 10ம் வகுப்பும், மற்றொரு பெண் 7ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். கடைசி மகன் 2ம் வகுப்பு படித்து வருகிறார். பெண் கூலி தொழிலாளியின் கணவர் 6 ஆண்டுகளுக்கும் முன்பே விபத்தில் இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப தொகையை கொண்டு குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார் அந்த பெண்.

தற்போது கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு உள்ளிட்டவற்றால் கூலி வேலையும் சரிவர கிடைக்காததால் அந்த குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. இதனால் தனது 12 வயது மகளுக்கு சிறுவனை போல பேண்ட், சர்ட் போட்டு வேடமிட்டு டீ விற்க அனுப்பியுள்ளார் அந்த தாய். டீ விற்கும் வருமானத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ள அவர், சிறுமியின் பாதுகாப்பிற்காக ஆண் போல வேடமிட்டு டீ விற்க அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தினசரிகளிலும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு உதவ அரசு முன்வர வேண்டும் என பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.