1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (08:30 IST)

ஹிட்லர் பத்தி பாடம் நடத்துங்க; சிறப்பா இருக்கும்! – சிபிஎஸ்சி குறித்து கமல் கிண்டல்!

சிபிஎஸ்சி மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்காக சில பாடங்களை சிபிஎஸ்சி நீக்கியுள்ளது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாத சூழல் உள்ளது. இதனால் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்காக சில பாடங்களை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி குடியுரிமை, மக்களாட்சி உரிமைகள் மற்றும் ஜி.எஸ்டி முதலிய தலைப்புகளிலான பாடங்கள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ”மாணவர்களின் மன உளைச்சலை தவிர்க்க குடியுரிமை, மக்களாட்சி மற்றும் ஜிஎஸ்டி பாடங்களை சிபிஎஸ்சி நீக்கியுள்ளது. சொல்லப்போனால் அவர்கள் மெய்ன் கம்ஃப், கூ க்ளக்ஸ் க்ளானின் வரலாறு மற்றும் மார்குவெஸ் டெ சால்டே குறித்த பாடங்களை நடத்தினால் உளைச்சலை போக்குவதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மெய்ன் கம்ஃப் (எனது வரலாறு) என்னும் புத்தகம் ஜெர்மன் சர்வதிகாரி அடால்ப் ஹிட்லரால் எழுதப்பட்டது. கூ க்ளக்ஸ் க்ளான் என்பது கறுப்பினத்தவர்கள் மீது வெறுப்பு கொண்டு அவர்களை கொன்று வந்த முகமூடி அணிந்த ரகசிய அமைப்பு, மார்குவெஸ் டெ சால்டே என்பவர் சாடிசத்தை தூண்டிய பிரெஞ்சு தத்துவவியலாளர். இவர்களது பாடங்களை சேர்க்க சொல்வதன் மூலமாக மத்திய அரசு சர்வதிகார போக்குடன் செயல்படுவதை கமல்ஹாசன் மறைமுகமாக கிண்டல் செய்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.