விநாயகர் சிலை ஊர்வலம் 40 சிசிடி கேமராக்கள்,2 டிரோன் கேமரா உட்பட 600கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்போடு ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சீனி கடை முக்கம், தென்னகர், சடையன் தெரு, பேருந்து நிலையம், நரங்கியப்பட்டு, உள்பட 9 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதை தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக திருச்சி டிஐஜி மனோகரன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கறம்பக்குடியில்
பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் தாரை தப்பட்டைகள் முழங்க கறம்பக்குடி சீனிகடை முக்கம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றடைந்தன.
பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்வலம் நடைபெற்றது. இந்துக்களின் ஒற்றுமை எழுச்சி ஊர்வலம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை இந்து முன்னணி மூத்த நிர்வாகி ஆனந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் சீனிகடை முக்கத்தில் தொடங்கி திருவோணம் சாலை, தட்டாவூரணி சாலை, தட்டார தெரு, கடைவீதி, பள்ளிவாசல் வீதி, பேருந்து நிலையம், கச்சேரி வீதி, புதுக்கோட்டை ரோடு வழியாக சென்று திருமணஞ்சேரி அக்கினி ஆற்றை அடைந்தது.
பின்னர் விழா குழுவினர்கள் பூஜைகள் செய்து அக்னி ஆற்றில் சிலைகளை கரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் 40 சிசிடிவி கேமராக்கள்,2 டிரோன் கேமரா உட்பட 600கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.