திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (08:11 IST)

ஜெயலலிதாவை விட சிறப்பான ஆட்சி: ஈபிஎஸ் ஆட்சி குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அவரது பெயரை கூட சொல்ல தயங்கிய அதிமுக அமைச்சர்கள் இன்று பேட்டியின்போது ஜெயலலிதா என்ற அவருடைய பெயரை சொல்வது மட்டுமின்றி அவரது ஆட்சி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சியை விட சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேலும் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சியை விட தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முதல்வருக்கும் ஆட்சியை நடத்துவதில் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். ஆனால் மக்களோடு மக்களாக பழகும் எடப்பாடி பழனிசாமியின் ஸ்டைல் வித்தியாசமானது. இந்த ஸ்டைல் இனி எந்த முதல்வருக்கும் வராது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மக்களோடு மக்களாக பழகவில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.