1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (07:31 IST)

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

Arrest
சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் கஞ்சா உள்பட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் போதை விற்பனை அதிகமாகி வருவதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ஜெஜெ நகர் பாரிசாலை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கார்த்திகேயன் என்ற இளைஞர் போதை விற்பனை செய்த போது சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதும், ஆன்லைன் மூலம் போதை விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 48 போதை மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா மற்றும் 94 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது கல்லூரி மாணவி உள்பட மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் ஒரே தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல செயலியை பயன்படுத்தி போதை விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.



Edited by Siva