செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 18 அக்டோபர் 2023 (14:42 IST)

மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூகவலைதள பக்கத்தில்,

''தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் எதிர்பார்ப்புகளில் சிறிய அளவைக் கூட நிறைவேற்றாத இந்த அறிவிப்பால் எந்த பயனும் இல்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால், பொதுப்பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப்பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்து விட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 15 மடங்கு அதிகரித்தது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு மின்கட்டண உயர்வுக்கு முன்பாக பொதுப்பயன்பாட்டுக்காக 150 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால், அதற்கான கட்டணமாக ரூ.112.50 காசுகள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், இப்போது அதே அளவு மின்சாரப் பயன்பாட்டுக்கு ரூ.1600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக உயர்வு ஆகும். இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1225 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 11 மடங்கு அதிகம் ஆகும். பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 15 மடங்கு உயர்த்தி விட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மின்கட்டணம் மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து மக்களை ஓரளவாவது காப்பாற்ற, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும். முன்பு வழங்கப்பட்டதைப் போல பொதுப்பயன்பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.