திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மார்ச் 2025 (13:06 IST)

அதிமுகவில் வெடிக்கும் எடப்பாடியார் - செங்கோட்டையன் மோதல்! - அதிர்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுகவில் சமீப காலமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செயல்பாடுகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக கட்சியை வலுப்படுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் அடங்கிய குழுவை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.

 

இந்நிலையில்தான் கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாத செங்கோட்டையன்,  விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாததை காரணமாக சொன்னார். சமீபத்தில் பட்ஜெட் தாக்கலின்போது சட்டமன்றத்தில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியபோது செங்கோட்டையன் அமைதியாகவே இருந்தார். மேலும் அவர் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் “செங்கோட்டையனின் செயல்பாடு பற்றி கருத்து தெரிவித்துள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இது தனிப்பட்ட விஷம் என சொல்லிவிட்டார். சட்டமன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக அதிமுக நடத்திய கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு என்ன பிரச்சினை என்று அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

 

கட்சியில் ஒன்றிரண்டு பூசல்கள் இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருக்கும். அந்த வருத்தத்தால் கட்சியில் இருந்து போனவர்கள் காணாமலே போய் விட்டார்கள். சொந்த அண்ணன் - தம்பிக்குள் பிரச்சினை என்றால் பேசிதான் தீர்க்க வேண்டும். செங்கோட்டையனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பொதுச்செயலாளரைத்தான் சந்தித்து பேசி இருக்க வேண்டும். அதை விட்டு பொதுவெளியில் அவர் இப்படி நடந்து கொள்வது அநாகரீகம்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K