ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!
ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026 ஆம் ஆண்டு அமைப்போம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், சசிகலா தான் அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் முயற்சி செய்தார். ஆனால், திடீரென அவர் வருமானத்திற்கும் அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது மட்டுமன்றி, அதிமுகவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாக இருந்தாலும், திடீரென அவர் எதிர்ப்புக் குரல் கொடுத்ததை அடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதே போல், டி.டி.வி தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக மாறி, கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தாலும், அவரது தலைமையிலான அதிமுக ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை என்பது தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால், ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "அனைவரும் ஒன்றாக இணைந்து, அதிமுக ஆட்சியை 2026 இல் அமைப்போம்" என்றும், அணிகள் இணைப்புக்கான இறுதி முடிவு தொண்டர்களின் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva