புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 ஜூன் 2020 (16:44 IST)

மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால்…? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஊரடங்கில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மீண்டும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் ‘கடந்த இரண்டு மாதங்களாக ஒரு காட்டாற்று வெள்ளத்தைக் கடப்பது போல, மிகவும் இக்கட்டான காலச் சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்பு மற்றும் பேராதரவுடன் நாம் கடந்து வந்துள்ளோம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, நாம் அனைவரும் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் கற்பனை செய்ய இயலாதவை. ஒரு திருமணத்திற்கோ, நெருங்கியவர்களின் இறுதி சடங்குகளிலோ கூட கலந்து கொள்ள முடியாத துயரங்களை எல்லாம் கொரோனா வைரஸ் நமக்கு ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில், இந்த கொரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது.

“இந்த ஊரடங்கினால் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிரமங்களையும் நீங்கள் சந்தித்து இருப்பீர்கள். சுறுசுறுப்பான நீங்கள், வீட்டிலேயே முடங்கியிருப்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை நான் அறிவேன். இருப்பினும், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத உலகத்திற்கே புதியதான இந்த தொற்றினை எதிர்கொள்ள பொருளாதார வளமிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், அசாதாரண முன்னெச்சரிக்கையும், கட்டுப்பாடும் நமக்கு தேவைப்பட்டது. தனி மனித உறுதியும், ஒழுக்கமுமே, கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காக்கும் என்பதனை நாம் உணர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

தமிழ்நாட்டு மக்களை மீட்கும் இந்த நடவடிக்கையில் சரியான வழிமுறைகளை எந்தவிதமான அச்சமின்றி நேர்மையுடனும், உண்மையுடனும், உங்களின் மக்கள் நல அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கினை அரசு அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்நோய் பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது.வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும், பொது மக்கள் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவ வேண்டும். மேலும், பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்..தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைப் பிடித்தும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், உணவு பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.