செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 ஜூன் 2020 (12:59 IST)

தமிழர்களுக்கு உதவிய வில்லன் நடிகர்! – ராமதாஸ் பாராட்டு!

ஊரடங்கால் மகராஷ்டிராவில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவியதற்காக பிரபல வில்லன் நடிகருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தியில் பிரபலமான வில்லன் நடிகராக இருப்பவர் சோனு சூட். இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வரும் இவர் தமிழில் ஒஸ்தி, அருந்ததி போன்ற படங்களிலும் வில்லனாக நடித்திருக்கிறார். படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக பல உதவிகள் செய்து வருகிறார் சோனு. சமீபத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் கால்நடையாக சென்று உயிரிழந்த நிலையில், கேரளாவில் சிக்கியிருந்த புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தனி விமானத்தை ஏற்பாடு செய்தது வைரலானது, இந்நிலையில் மும்பையில் சிக்கியிருந்த 200 தமிழர்கள் தமிழகம் திரும்புவதற்கு தேவையான உதவிகளையும் நடிகர் சோனு செய்துள்ளார்.

அவரது இந்த உதவியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் மும்பையில் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 200 பேரை தமது சொந்த செலவில் பேருந்துகளை அமர்த்தி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் இந்தி திரைப்பட நடிகர் சோனு சூட். மகிழ்ச்சி. இதேபோல பல உதவிகளை செய்துள்ள அவருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!” என்று தெரிவித்துள்ளார்.