திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (17:24 IST)

"தவறை மூடி மறைக்காதீர்கள்".! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங்.!!

Anbil Magesh
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தை விட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
 
கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், மாநில பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமாெழி தலைமையில் இன்று நடைபெற்றது. 
 
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் தொல்லை விவகாரத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்து காவல்துறையிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
 
இது மீண்டும் நடக்காத வகையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்திலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் பள்ளி மாணவர்களுக்கு 800 மருத்துவர்கள் ஒன்றியம் வாரியாக கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
 
ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் கவுன்சிலராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்று அமைச்சர் தெரிவித்தார். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலையில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்
 
தொடர்ந்து, கோவையில் போக்சோ சட்டத்தில் ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “போக்சோ சட்டம் இருந்தாலும், மனநிலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்
 
பள்ளி நிர்வாகம் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள் என என குறிப்பிட்டு அமைச்சர், தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு நடந்தாலும் பள்ளி மேலாண்மைக்குழு அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டத்தைவிட கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி கூறினார்.