சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (15:38 IST)

வெறும் தேர்தல் அரசியல் நடத்தும் திமுக..! முதல்வர் ஏன் வரவில்லை.? பிரேமலதா சரமாரி கேள்வி..!!

premalatha vijayakanth
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை என்றும் வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடைபெறுகிறது என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
 
கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை,  பிரேமலதா  நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வேதனை தெரிவித்தார். 
 
ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதல்வர் கூறியதை சுட்டிக்காட்டி அவர், இன்றைக்கு பல உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். 

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அடிக்கடி வரும் முதல்வர், இன்றைக்கும் 38 உயிர்கள் இறந்த போதும் ஏன் இன்னும் வரவில்லை என்று கேள்வி எழுப்பிய பிரேமலதா,  வெறும் தேர்தலை மட்டுமே மையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள் என்றும் வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடக்கிறதே தவிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக தெரியவில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.

 
அடுத்த தேர்தலை நோக்கிதான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்றும் மக்களை பற்றி சிந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். விஷச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் அறிவித்துள்ளனர் என்றும் இது விஷச்சாராயம் அருந்துவதை ஊக்குவிக்கிறது என்றும் பிரேமலதா தெரிவித்தார்.