மதுரை 2வது தலைநகர்: போர்கொடி தூக்கிய திமுக!
மதுரையை 2வது தலைநகராக முன்னிலைப்படுத்துவதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகர் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தமிழக தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில் அனைத்து துறை செயல்பாடுகளும் சென்னையிலேயே நடைபெற்று வருவதாலும், மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் புதிய தலைநகர் மாற்றுவது குறித்த கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் மதுரையை மையமாக கொண்டு தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இரண்டாவது தலைநகரை உருவாக்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாக ராஜன் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நிச்சயமாக, எல்லோரும் மதுரைக்கு அதிக முதலீடு மற்றும் தொழில் நிறுவனங்களை கொண்டு வர விரும்புகிறார்கள். ஆனால், அதிமுக அமைச்சர்கள் இவ்வளவு தாமதாமாகவும், தேர்தல் வரும் இந்த நேரத்தில் ஏன் முடிவு எடுக்கிறார்கள்?
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர். 9.5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோசனை ஏன் வருகிறது. மதுரையில் அழிந்து வரும் உள்கட்டமைப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும், கழிவுநீர் மற்றும் நீர் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள், இவை எதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படவில்லை.
நகரத்தின் தலைநகரம் அல்லது சிறந்த நகரம் என்று பெயரிடுவதை விட, நகரத்தின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார்.