தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக எதிரி..! கொள்ளையடிப்பது இலக்கு..! பிரதமர் மோடி..!!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக அரசு எதிரியாக உள்ளது என்றும் திமுக காங்கிரஸ் கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பது இலக்காகும் என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரியில் பாஜகாலை வீசுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி எடுபடாது என தெரிவித்த பிரதமர், திமுக காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் என்றும் கூறினார்.
நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதிலும் கூட ஊழல் செய்தார்கள் என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
கன்னியாகுமரி மாவட்ட மக்களை எப்படி எல்லாம் சுரண்டலாம் என திமுக காங்கிரஸ் கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் மார்த்தாண்டம் பார்வதிபுரம் இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற குமரி மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை பாஜக நிறைவேற்றி உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
துறைமுகம் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும், அந்த வகையில் தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை வருவதாகவும், ஆனால் மாநில அரசு குமரி மக்களை வஞ்சிக்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
தமிழகத்தில் 15 ஆயிரம் கோடியில் புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் திமுக அரசு ஒரு எதிரி போல் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாஜக அரசு வந்த பிறகுதான் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார். அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் குடமுழுக்கு விழாவை தமிழ்நாட்டில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய திமுக அரசு தடை விதித்தது என்று அவர் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பாஜக கூட்டணி அரசு தான் ஜல்லிக்கட்டை கொண்டு வந்தது என்றும் சனாதனத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். திமுக காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.