புதன், 20 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (19:01 IST)

திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள்: அன்புமணி கடும் விமர்சனம்..!

Anbumani
காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் கத்தியால் குத்தி படுகொலை:  ஓசூரில்  நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு  வெட்டு - தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எங்கே? முதலமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
 
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில்  பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள்  நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது. கொல்லப்பட்ட ஆசிரியை  ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த  இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
அதேபோல், ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன்  என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  அவர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்தியதால் ஏற்பட்ட அதிர்ச்சியும்,  பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே  தஞ்சாவூருக்கு அருகில்  பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும்,  வழக்கறிஞர்  கொடூரமான முறையில்  வெட்டப்பட்டிருப்பதையும்  பார்க்கும் போது நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் தான் ஏற்படுகிறது.
 
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் படுகொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருக்கின்றன. ஆனால், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. மக்களுடன் கொஞ்சமும் ஒட்டாத வகையில்,  தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.  மக்களிடமிருந்தும்,  தமிழகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இருந்தும்  முதலமைச்சர் எவ்வளவு தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதற்கு இவை தான் சான்றுகள்.
 
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட முதலமைச்சர் செல்லவில்லை. காவல்துறைக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் எவ்வாறு விற்க முடியும்? என்று உயர்நீதிமன்றம் இன்று வினா எழுப்பியுள்ளது. நீதித்துறை, மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்படும் அவல நிலைக்கு காவல்துறை தள்ளப்பட்டுள்ளது.
 
காவல்துறையை அதன் தலைமை இயக்குனர் தான் இயக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருக்கிறார்கள். காவல்துறையின் பின்னடைவுக்கும், சட்டம் -  ஒழுங்கு சீர்குலைவுக்கும் இது தான் காரணம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
Edited by Mahendran