திமுக கவுன்சிலர் வேட்பாளர் திடீர் மரணம் – அந்தியூரில் அதிர்ச்சி!
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அந்தியூர் திமுக கவுன்சிலர் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரின் அத்தாணி பகுதியில் 3வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடுபவர் ஐயப்பன். தேர்தல் தேதி அறிவித்தது முதலாக வார்டு முழுவதும் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வாக்கு சேகரிப்பு பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர் இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வேட்பாளரின் திடீர் மரணம் அப்பகுதி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.