ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 2 நவம்பர் 2016 (15:43 IST)

மக்கள் நலக் கூட்டணியுடன் விஜயகாந்த் மீண்டும் பேச்சு வார்த்தை?

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கம் என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தன. அதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 

 
பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி குறைந்தபட்ச செயல் திட்ட அறிக்கையை கூட்டியக்க தலைவர்கள் இணைந்து வெளியிட்டனர். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் செயப்ல்படும் என்று அறிவித்தனர்.
 
அதன்பிறகு, பொதுமக்கள் பிரச்சனைகள் அனைத்திலும் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து, மக்கள் நல கூட்டியக்கமாக செயல்பட்டது. பின்னர், 2016 சட்டமன்ற தேர்தலில் நான்கு கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திப்பது என்று முடிவெடுத்தது.
 
பின்னர், இந்த கூட்டணியில் தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தன. ஆனால், இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதனையடுத்து, இந்த கூட்டணியில் இருந்து தேமுதிக, தமாகா ஆகியவை விலகின.
 
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கப்பதாக அறிவித்துவிட்டது. ஆனால், போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் தேமுதிக அறிவித்துவிட்டது.
 
கடந்த சட்டமன்ற தொகுதியில் ஒரு இடம்கூட தேமுதிக வெல்லாததால், இந்த தேர்தலை சந்திக்கும் தேமுதிக ம.ந.கூ., கட்சிகளின் ஆதரவு அவசியம் என கருதுகிறது.
 
அதே சமயம் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும், தேமுதிக ஆதர்வு கோரினால், அக்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. இதனால், விரைவில் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.