சும்மா கிண்டலுக்கா போட்டது அது.. தப்புனா மன்னிச்சுடுங்க! – வீடியோ வெளியிட்ட மேதகு இயக்குனர்!
மேதகு திரைப்பட இயக்குனரின் முகப்புத்தக பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குனர் கிட்டு.
விடுதலை புலிகள் இயக்கத்தை உருவாக்கிய பிரபாகரனின் இளமை கால வாழ்க்கையை மையப்படுத்தி தமிழில் வெளியாகியுள்ள படம் மேதகு. இந்த படத்தை கிட்டு இயக்கியுள்ளார். ஓடிடியில் இந்த படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் கிட்டு 2019ம் ஆண்டு வாக்கில் அரசியல் கட்சிகளை விமர்சித்து, கிண்டலடித்து வெளியிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள இயக்குனர் கிட்டு “மேதகு படம் வெளியாக அனைத்து அரசியல் கட்சிகளுமே துணை நின்றன. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன். தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருபவை என்னுடைய பழைய பதிவுகள். மேதகு படத்தின் வெற்றியை சிதைக்க பலர் என்னுடைய பதிவில் சில மாற்றங்களையும் செய்து பதிவிடுகின்றனர். எனது பதிவுகள் எந்த அரசியல் கட்சியினர் மனதை புண்படுத்தி இருந்தாலும் நான் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.