செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:57 IST)

முகமது நபியை இழிவுபடுத்திய கல்யாணராமன் – தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கடிதம்!

இஸ்லாமிய மக்களால் இறுதித் தூதர் என அழைக்கப்படும் முகமது நபியை பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் இழிவாக பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் தேர்தலில் கவனம் செலுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் என்பவர் இஸ்லாமிய இறைதூதரான முகமதுநபி குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் கல்யாணசுந்தரம் மற்றும் இரு பாஜகவினரை கைது செய்து அவிநாசி கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் அமீர் தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார்:-

தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபியை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இது போல் ஒரு நச்சுக் கருத்தை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கல்யாணராமன் மற்றும் வேலூர் இப்ராஹிம் ஆகிய இருவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மத்திய மாநில அரசுகளிடம் வேண்டுகோள் வைக்கிறேன்