அதிமுக அமைச்சர்களுடன் தினகரன் அவசர ஆலோசனை - பின்னணி என்ன?
அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன், துணைப் பொதுச்செயலாளர் தினகரன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியுள்ள ஓ.பி.எஸ் அணி, சசிகலா தரப்பிற்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வருகிறது. அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக சசிலாவை நியமித்தது செல்லாது என அறிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ் அணி புகார் கொடுத்துள்ளது. அதற்கு விளக்கம் அளிக்கும் படி சசிகலாவிற்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கு தினகரன் தப்பிலிருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதில் தேர்தல் கமிஷன் திருப்தி அடையவில்லை என தெரிகிறது. மேலும், அதுபற்றிய தனது முடிவை விரைவில் அறிவிக்க உள்ளது. அநேகமாக, அதிமுக சட்ட விதிகளின் படி, தேர்தல் நடத்தி பொதுச்செயலாளாரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவிக்கும் என ஓ.பி.எஸ் தரப்பு எதிர்பார்க்கிறது.
மேலும், ஜெ.வின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பி.எச் பாண்டியன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஜெ.வின் மர்ம மரணம் குறித்து ஏராளமான கேள்விகளை எழுப்பினர். மேலும், ஜெ. மரணத்தில் குற்றவாளியை நெருங்கிவிட்டதாக பி.எச். பாண்டியன் கூறினார். இவை அனைத்தும் சசிகலா தரப்பிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன் தினம் தினகரன் கட்சி நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரோடு அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
சசிகலா பதவி நியமனம், ஜெ. மரணம் தொடர்பாக ஓ.பி.எஸ் அணி எழுப்பியுள்ள சந்தேகங்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை ஓ.பி.எஸ் அணிக்கு செல்ல விடாமல் எப்படி தக்க வைப்பது என்பது போன்ற விஷயங்கள் குறித்து அவர் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நவநீதிகிருஷ்ணன் உள்ளிட்ட்ட பலர் கலந்து கொண்டனர்.