அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்து.. கோமியம் குறித்த சர்ச்சைக்கு அண்ணாமலை பதில்..!
கோமியம் குறித்து ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்துக்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியபோது, அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்து என்று கூறினார். இதே கருத்தைதான் வானதி சீனிவாசனும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோமியம் என்பது புனித நீர் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். அதேபோல், கோமியம் காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய மருந்து என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
இந்த பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, "அது அவரவர் தனிப்பட்ட கருத்து; இது கட்சியின் கருத்து அல்ல. அதை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்களின் விருப்பம்" என்று கூறினார்.
அவர் மேலும், "என்னை பொறுத்தவரை பசுவை நான் தெய்வமாக வணங்குகிறேன். ஆனால், அது என் வீட்டோடு வைத்துக்கொள்வேன். பொதுவெளியில் இதுபோன்ற கருத்துக்களை விவாதிக்காமல் விட்டு விடுவது நல்லது" என்று தெரிவித்தார்.
இதேபோல், வானதி சீனிவாசனும், "சாப்பிடும் பொருள் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இதற்கு நாம் தலையிட தேவையில்லை" என்று கூறினார்.
இதன் மூலம் பாஜக தலைவர்களுக்குள் கோமியம் குறித்த கருத்துகளில் மாறுபாடு உள்ளது என்பது உறுதியாகிறது.
Edited by Mahendran