திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 9 மே 2016 (11:04 IST)

திமுகவுக்கு கிறிஸ்தவர்கள் ஆதரவா? - மதுரை பிஷப்புக்கு தேவசகாயம் கண்டனம்

சட்டமன்றத்திற்கான தேர்தலில், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திமுக-வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மதுரை ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி அறிக்கை விடுத்திருப்பதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 

 
தமிழ்நாடு பிஷப் கவுன்சிலின் ஒப்புதலைப் பெறாமல், அந்தோணி பாப்புசாமி அவராகவே பிஷப் கவுன்சில் சார்பில் இந்த அறிக்கையை விடுத்திருப்பதாகவும், அந்தோணி பாப்புசாமியின் இந்த வேண்டுகோள் கத்தோலிக்க அமைப்புகளின் விதிகளை மீறியதாகும் என்றும் பல்வேறு கத்தோலிக்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களிடம் கூறிய சென்னையைச் சேர்ந்த கூட்டு கிறிஸ்தவ செயல்பாட்டு கவுன்சில் மற்றும் கத்தோலிக்கர்களின் ஒற்றுமைக்கான மேடை அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.ஜி. தேவசகாயம், “அந்தோணி பாப்புசாமியின் வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கத்தோலிக்க அமைப்புகள் தமிழ்நாடு பிஷப் கவுன்சிலுக்கு மனு அளித்துள்ளனர்.
 
அந்த மனுவில் கடந்த காலத்தில் கத்தோலிக்கத் தலைமை இதுபோன்ற கட்டளைகளையோ வேண்டுகோள்களையோ விடுத்ததில்லை; எதிர்காலத்திலும் விடாது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பிஷப் கவுன்சில் மதுரை ஆர்ச்பிஷப் அந்தோணி பாப்புசாமி கையெழுத்திட்டுள்ள வேண்டுகோளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
 
இந்த வேண்டுகோளின் பின்னணியில் அரசியல் ஆதாயம் பெற விரும்பும் சிலரும், சில அலுவலகங்களும் உள்ளன. அந்தோணி பாப்புசாமி தனிப்பட்ட முறையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழ்நாடு பிஷப் கவுன்சில் இந்த வேண்டுகோளின் அடிப்படையில் தீர்மானம் எதையும் இயற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும், கவுன்சிலுக்கு இதுபோன்ற கட்டளையோ அல்லது வேண்டுகோளையோ விடுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படியிருக்க அந்தோணி பாப்புசாமிக்கு எப்படி இது போன்ற வேண்டுகோளை விட முடியும்? திமுக பொருளாளர் ஸ்டாலின் கத்தோலிக்கர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தன்னிடம் கூறியுள்ளதாக அந்தோணி பாப்புசாமி தனது அறிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.
 
அந்தோணி பாப்புசாமி மேற்கொண்ட நடவடிக்கை கத்தோலிக்க தேவாலயங்களின் அடிப்படை கொள்கைகளை மறுப்பதாகும். உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் இது போன்று கட்சி அரசியலில் ஈடுபட்டதில்லை. தேவாலயங்கள், தங்களது சபை உறுப்பினர்களை, தேர்தலில் வாக்களிக்க வேண்டும்; ஏனெனில் அது ஒரு புனித கடமை என்றும், அனைவரும் மனசாட்சிபடி வாக்களிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளதே அன்றி இது போன்று கூறியதில்லை.
 
அந்தோணி பாப்புசாமியின் நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123-ஐ மீறியதாகும் என்று அவருக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கத்தோலிக்க மதத் தலைவர்களின் பொறுப்பானது, அதை நம்புவர்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றுவதே ஆகும். அதைத் தவிர்த்து அவர்களுக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் அதிகாரம் செலுத்தும் செயலில் ஈடுபடக்கூடாது” என்று கூறியுள்ளார்.