தினகரன் ஒரு மாயமான் - ஓபிஎஸ்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரன் ஒரு மாயமான் என்று கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஆலோசனை கூட்டத்திற்கு தற்போது பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
இதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
நாங்கள் தோல்வி அடையவில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தினகரன் ஒரு மாயமான். தினகரனை பற்றி எனக்கு நன்றாக தெரியும். தினகரன் வாரிசு அரசியல் நடத்த துடிக்கிறார். நாங்கள் புரட்சி தலைவர் மற்றும் ஜெயலலிதா வழியில் ஆட்சியை நடத்த போராடி வருகிறோம் என்று கூறியுள்ளார்.