ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 5 அக்டோபர் 2017 (16:36 IST)

காவல் துறையிலும் ஊழல் - வாக்கி டாக்கியின் விலை ரூ.2.08 லட்சம்?

தமிழக காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்தும் வாக்கி டாக்கிகள் வாங்கிய விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


 

 
தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் வட்டத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், தற்போது காவல் துறையிலும் ஊழல் புகுந்து விட்டது தெரியவந்துள்ளது. 
 
பொதுவாக வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரலில் பல நிறுவனங்கள் பங்கேற்கும். அதில், ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிடும் போது ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்படும். இதுதான் காலம் காலமாக உள்ள நடைமுறை. 
 
ஆனால், 2017-18ம் ஆண்டுக்கான வாக்கி டாக்கி வழங்கும் ஒப்பந்த புள்ளி கோரலில் மோடோரோலோ சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் மட்டுமே பங்கேற்றுள்ளது. அதற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.
 
உண்மையில், அந்த திட்டத்திற்கு ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதிக பட்சமாக ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, வெறும் 4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய விதிமீறலாகும். 
 
ஒரு வாக்கி டாக்கியின் விலை ரூ.47.56 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டு பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியுள்ளார். ஒப்பந்த புள்ளி கோரலில் ஒரே ஒரு நிறுவனமே, அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து விட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ள நிரஞ்சன் மார்டி, வாக்கி டாக்கியின் தொழில் நுட்ப மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை, வாக்கி டாக்கி வழங்கும் நிறுவனத்திற்கு அளித்த ஒப்பந்த ஏற்பு ஆணை, கொள்முதல் ஆணை ஆகியவற்றை தாக்கல் செய்யுமாறு காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். காவல் துறையிலும் ஊழல் புகுந்து விட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.