கரூர் மாவட்டத்தில் 20 நபர்களுக்கு கொரோனா உறுதி : 1627 நபர்கள் தொடர் கண்காணிப்பு
கரூர் மாவட்டத்தில் 20 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1627 நபர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சைக்காக வர உள்ளதாகவும் கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 157 ஊராட்சிகள், 11 பேரூராட்சிகள், 2 நகராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் இதுவரை மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், 6 வது முறையாக கொரோனா நோய் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் இதுவரை 20 நபர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 19 நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஒரு நபர் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இது இல்லாமல் கொரோனா நோய் தொற்றா என்று அரசு மருத்துவமனையில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ரத்த மாதிரிகள் அனுப்ப பட்டுள்ளதாகவும், தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ் பாதித்த 20 நபர்கள் குடியிருந்த வீடுகளுக்கு அருகிலேயே வசித்தவர்கள் அனைவரும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கென்று தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் செம்மையாக பணியாற்றி வருவதாகவும் கூறினார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வீடுகள் தோறும் காய்கறி திட்டம் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டு வருகின்றதாகவும் இதற்கென்று குளித்தலை நகராட்சியில் மட்டும் 20 வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்,. கரூர் மட்டுமில்லாது, நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர உள்ளதாகவும், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக, கொரோனா நோய் தொற்று உள்ளவர்கள் உறவினர்களை வீடுகளிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கொரோனா சிகிச்சைக்காக ரூ 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா குறித்த புகார்களை, கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்குமாறும் இன்று வரை 563 புகார்கள் வந்துள்ளதாகவும், இன்றைய நிலவரப்படி 1627 நபர்கள் வீடுகளில் இருக்க கூடியவர்கள் என்றும் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.