திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (15:49 IST)

கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரே  திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான திமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்த்தி சிதம்பரம் பேசிய நிலையில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் மட்டும் திமுக ஆதரவு இல்லாமல் போட்டியிட்டு இருந்தால் டெபாசிட் கூட வாங்கி இருக்க மாட்டார் என்றும் இதை ஏன் அவர் தேர்தலுக்கு முன் பேசவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.  அதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பில் இருந்து பதில் கிடைத்த போதிலும் கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருவதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி திமுக தரப்பிலிருந்தும் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லப்பருந்தகையை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளதாகவும் கேஆர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Edited by Siva