சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்-.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!!
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த யுடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இது தொடர்பாக பெண் போலீசார் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அதிரடியாக போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் கஞ்சா வைத்திருந்ததாக கூறி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு மாவட்டங்களில் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
தற்போது ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கிலும் சவுக்கு சங்கருக்கு கோவை 4 வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் ஜாமின் கிடைத்தாலும் அவரால் வெளியே வர முடியாது.
அனைத்து வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்தால் மட்டுமே அவரால் வெளியே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.