1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (10:54 IST)

ஆசிரியை கடத்தி சித்ரவதை: அண்ணன் – தம்பி கைது!

கோவையில் திருமணம் செய்வதாக கூறி ஆசிரியரிடம் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா. அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் இவர் விவாகரத்து ஆனவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழாவுக்கு சென்ற இவர் அங்கு தனது பள்ளிக்கால நண்பரான ஆசாத் என்பவரை சந்தித்துள்ளார்.

ஆசாத் ஏற்கனவே திருமணமானவர். எனினும் இருவரும் போன் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஆசாத் சசிகலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பிறகு சில நாட்களாக ஆசாத் போன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு போன் செய்த மதன் என்ற நபர், தான் ஆசாத்தின் நண்பர் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

ஆசாத்தை திருமணம் செய்து வைப்பதாகவும் அதற்கு ஒரு லட்ச ரூபாய் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். சசிகலாவும் அதற்கு ஒப்புக்கொள்ளவே அவினாசி ரோட்டுக்கு வர சொல்லியிருக்கிறார் மதன். அவினாசி ரோட்டில் காத்திருந்த சசிகலாவை மதன் மற்றும் அவருடன் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது.

அவரிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டதோடு, அவரது ஏடிஎம் கார்டையும் பறித்து பணம் எடுத்துள்ளார்கள். பிறகு அவரை ஒரு விடுதியில் தங்க வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பித்து சென்றுள்ளது.

இதுகுறித்து சசிகலா காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் ஆசாத் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோயம்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.