ஒரே கழிவறையில் எப்படி ரெண்டு பேர் போறது? – சர்ச்சைக்கு மாநகராட்சி விளக்கம்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமுதாய கழிப்பிடத்தில் ஒரே அறையில் இரண்டு கழிவு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சியின் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிவறையில் ஒரே அறையில் இரண்டு கழிவு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கும் கதவும் இல்லை. இதனால் இந்த கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலரும் புகைப்படங்களை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கியதால் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை மாநகராட்சி, அந்த கழிவறை 1995ல் கட்டப்பட்டது என்றும், குழந்தைகள் பெரியவர்களுன் உதவியுடன் மலம் கழிப்பதற்காக அவ்வாறு அமைக்கப்பட்டதாகவும், குழந்தைகள் கதவை மூடிவிட்டு திறக்க தெரியாமல் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக கதவுகள் அமைக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த கழிவறையை இரண்டாக பிரித்து பெரியவர்கள் மட்டும் உபயோகிக்கும் கழிவறையாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.