திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (10:31 IST)

தங்கம் தென்னரசுக்கு ஆலோசனை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா!

தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுக்கு அமைச்சர்கள் குறுக்கீடு இல்லாமல் எப்படி பேச வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.


 
 
தமிழக சட்டசபையில் நேற்று  பள்ளிக் கல்வி, உயர் கல்வி, விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மர்றும் இளைஞர் நலன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.
 
இதனையடுத்து அமைச்சர்கள் பதிலளிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக கூறி திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன்.
 
ஒரு விஷயத்தை கூறும் பொழுது, அதை சொல்லிவிட்டு, இதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பாரா? இதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள். இதனால் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர்கள் எழுந்து நின்று பதில் சொல்கின்றனர்.
 
தங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. எனவே வினாவோடு முடிக்காமல் வேறு விதமாக பேச்சை முடித்தால் அமைச்சர்களின் குறுக்கீடுகளை ஓரளவு தவிர்க்கலாம் என்றார். இதற்கு தங்கம் தென்னரசும் நல்ல யோசனை என்றார்.