வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:21 IST)

ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பனை : ’மாஸ் ’நடிகர்களுக்கு சம்பளம் குறையுமா ?

நடிகர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் ஏறிக்கொண்டே போகிறது, இதைக் கணக்கில் கொண்டே ஒரு படத்தின் பட்ஜெட் கணக்கிடப்படுகிறது. ஆனால் சமீபகாலமாகவே திரைப்படங்களுக்கான டிக்கெட் விற்பனை என்பது ஒரு திரையரங்கத்தினரின் சகல உரிமையாக மாறி இருக்கிறது. அதனால் திரையரங்கு உரிமையாளர்கள் நிர்ணயிக்கும் விலையே டிக்கெட்டாக மக்கள் பர்ஸைப் பதம் பார்க்கிறது.

இந்த நிலையில் ஒரு குடும்பத்தினர் விடுமுறை நாட்களில், திரையரங்கத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், சினிமா டிக்கெட், கார் அல்லது பைக் பார்கிங், தின்பண்டங்கள்... அதற்கான ஜி.எஸ்.டி., ஆகியவற்றைச் சேர்த்தால் மொத்தமாக ரூ. 1000க்கு மேல் செலவு செய்ய நேரிடுகிறது.அதனால் பெருமளவு மக்கள் தியேட்டருக்கு வரமுடியாத நிலையே ஏற்படுகிறது. தியேட்டருக்கு வராத மக்கள் வேறுவழிமுறைகளைக் கைக்கொண்டும், வீட்டிலேயே இருந்து டிவியில் சிடிக்களை வாங்கியும் பொழுதைப் போக்குகின்றனர்.

சுமார் 10 வருடங்களுக்கு முன்பிருந்த தியேட்டர் டிக்கெட்டின் விலையை தற்போது ஒப்பிட்டால் திரையரங்கு உரிமையாளர்கள் தமது  லாபத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனரோ என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வி எழுவது நியாயமும் கூட.

இந்நிலையில், உண்மையில் யாருக்கு அதிகம் லாபம் வருகிறது? ஒரு நடிகருக்கா இல்லை அப்படத்தைத் தயாரிப்பவருக்கா ? அப்படத்தை இயக்கும் இயக்குநர்களுக்கா ? என்றால் ஒரு நல்ல கதையம்சம் உள்ள படம் நிச்சயமாக கோடிகளைக் குவித்து மக்களை திரும்பத்திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் வசீகரம் கொண்டது. தற்போது ஏற்பட்டுள்ள கதைவறட்சியால் நம் இயக்குநர்கள் பலர் ரீமேக் கலாச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர். அது சில சமயம் வெற்றி சில சமயம் தோல்வி ; இப்படியான காலக்கட்டத்தில் இன்றைய அமேசன் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற தொழில்நுட்பத்துக்கு இடையில் வேதாளம் முறுங்கைமரம் ஏறியது போன்று சினிமா தயாரிப்பாளர்களைக் கதறவைக்கும் தமிழ் ராக்கர்ஸ் பூச்சாண்டி ஒருபுறம்…இவற்றைத் தாண்டி ஒரு படம் வெற்றிபெறுவது சர்வ சாதாரணம் அல்ல.

இந்த நிலையில் ஒரு திரைப்படம் வெற்றிபெறாவிட்டால் கோடிகளில் சம்பளம் பெரும் நடிகர்கள், தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென பலவருடமாகக் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் நஷ்ட ஈடு தராத நடிகர்களின் படங்களை ஓடவிட மாட்டோம் எனவும் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் தற்போது, திரையரங்குகளில் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

சமீபத்தில், சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்  கடம்பூர் ராஜூவை, திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினர்.

இதில் திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பாக , அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோரும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்  மற்றும் இயக்குநர் சங்கம் சார்பில் ஐசரி கணேஷ் , பாரதிராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால், என்னென்ன சிக்கல்கள் ஏற்படும்? அதை எவ்வாறு சரிசெய்வது போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் , அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஆன்லைன் மூலம் திரையரங்குகளில், சினிமா  டிக்கெட்டுகளை  தமிழக அரசின் செயலியில் மட்டுமே முன்பதிவு செய்வதற்கு ஆதரவு கூடியிருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த ஆலோசனை கூட்டம் மீண்டும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

எனவே,இந்த ஆன்லைன் டிக்கெட் நடைமுறை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நடைமுறைக்கு வந்தால், நிச்சயமாக கோடிக்களில் சம்பளம் பெரும் நடிகர்களின் சம்பளம் கணிசமாகக் குறையும்! அதுமட்டுமில்லாமல் யார் வசூல் சக்கரவர்த்தி என்பதை, மக்கள் தொகை புள்ளி விவரம் போல எளிதில்,  ஊடகத்திற்கும் ,மக்களுக்கும் தெளிவாக தெரிந்துவிடும். இதையடுத்து மக்களின் ஆடம்பரமாக தியேட்டர் இல்லாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொழுதுபோக்குக் கூடாரமாகவே திரையரங்குகள் மாறும். அதற்கான காலம் இன்னும் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்...