வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (12:34 IST)

பிரியாணியோடு நகையை விழுங்கி ஏப்பமிட்ட நபர்! – நூதனமான திருட்டு!

சென்னையில் வீடு ஒன்றிற்கு விருந்து சாப்பிட சென்ற நபர் அந்த வீட்டில் இருந்த நகைகளை விழுங்கி நூதனமான முறையில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாலிகிராமம் பகுதியில் உள்ள அருணாச்சலம் சாலையில் வசித்து வருபவர் தாட்சாயணி. நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வரும் அவர் சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி தனது கடை மேலாளர் சாரா என்பவரை வீட்டிற்கு பிரியாணி விருந்திற்கு அழைத்துள்ளார்.

கடை மேலாளர் சாராவுடன் அபு பக்கர் என்ற நபரும் பிரியாணி சாப்பிட சென்றுள்ளார். அவர்கள் பிரியாணி விருந்து சாப்பிட்டுவிட்டு திரும்ப சென்ற பின் தனது பீரோ திறந்து கிடப்பதையும், அதில் தான் வைத்திருந்த மூன்று தங்கம் மற்றும் 2 வைர செயின்கள் காணாமல் போனதை கண்டு தாட்சாயணி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அபு பக்கர் மீது சந்தேகம் கொண்ட போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் தங்க செயின்களை விழுங்கியதாக கூறியுள்ளார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது செயின்கள் வயிற்றுக்குள் இருப்பது தெரிய வந்துள்ளது.

செயினை எடுக்க இனிமா கொடுத்தும் பலனளிக்காத நிலையில் அபு பக்கர் இயற்கை உபாதையை கழித்தபோது அதில் மூன்று செயின்கள் வெளிவந்துள்ளன. அவற்றை தாட்சாயினியிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.