உணவில் மயக்க மருந்து கொடுத்து திருட்டு – சென்னையில் சிக்கிய பலே திருடன்
ரயிலில் பயணிப்பவர்கள் உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவரது பொருட்களை திருடும் நூதன கொள்ளையன் சென்னை போலீஸாரிடம் பிடிப்பட்டான்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அமித் குமார். இவர் சென்னைக்கு ஹௌரா விரைவு ரயிலில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது உணவில் யாரோ மயக்க மருந்தை கலந்ததாக தெரிகிறது. அது தெரியாமல் அதை சாப்பிட்ட அமித் குமார் மயங்கி விழுந்தார். அவரது உடமைகள் மற்றும் பணப்பையை லவட்டிக் கொண்டு ஓட்டமெடுத்தான் அந்த மர்ம மனிதன்.
சென்னை காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார் அமித் குமார். ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீஸுக்கு அந்த பகுதியில் கொஞ்சம் வித்தியாசமாய் ஒருவன் நடமாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவனது வீடியோவை அமித் குமாரிடம் காட்டியுள்ளனர். அவன் ரயில் தனது அருகே அமர்ந்து பயணித்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து விசாரணை செய்த போலீஸாருக்கு அவனது பெயர் சுபாங்கர் சக்கரபோர்தி என்றும், அவன் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என்று தெரிய வந்திருக்கிறது. ஆனால் போலீஸார் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அவன் மீண்டும் மேற்கு வங்கத்திற்கு சென்றிருந்தான். இந்நிலையில் அவன் மீண்டும் சென்னை வருவதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.
ஹவுரா விரைவு ரயிலில் சென்னை வந்தவனை போலீஸார் மடக்கி பிடித்தனர். சென்னை முதல் மேற்கு வங்கம் வரை 10 மாநிலங்களில் தன் கைவரிசையை இந்த திருடன் காட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.