தீபாவின் டிரைவர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜெ. தீபாவின் உதவியாளர் மற்றும் பேரவையின் முக்கிய நிர்வாகியான ராஜா மீது அளிக்கப்பட்டுள்ள மோடி புகாரை விசாரனை செய்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் தீபா, பேரவையில் முக்கிய நிர்வாகியாக இருந்த அவரது டிரைவர் ராஜாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். இதையடுத்து ராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த ராஜாவை தீபா மீண்டும் தனது பேரவையில் இணைத்துக்கொண்டார்.
ராஜாவுக்கு தலைமை நிலைய மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி தீபா பேரவையில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்த ராமச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தீபாவும், ராஜாவும் கட்சி அலுவலகம் மற்றும் குடும்ப செலவுகளுக்காக 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ரூ.1 கோடியே 12 லட்சம் என்னிடம் வாங்கினர். எனக்கு கட்சியில் முக்கிய பதவியும் ஆட்சிக்கு வரும்போது அமைச்சர் பதவியும் தருவதாக கூறினர். என்னை ஏமாற்றுகின்றனர் என தெரிந்ததும் பணத்தை திருப்பிக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுதொடர்பாக கடந்த மாதம் 11ஆம் தேதி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசரித்து முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.