தேர்தலுக்கு விடுமுறை வழங்காவிட்டால் குற்ற நடவடிக்கை!? – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
தமிழகத்தில் தேர்தல் அன்று விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரே சுற்றில் நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தேர்தலில் நேரடியாக வாக்களிக்க முடியாத தேர்தல் பணியாளர்கள், காவலர்கள், வயதானவர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சல் ஓட்டு மூலம் வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் அன்று அனைத்து மக்களும் சொந்த ஊர் செல்ல வசதியாக ஏப்ரல் 1 முதலே சிறப்பு பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “ஏப்ரல் 6 சட்டமன்ற தேர்தல் நாள் அன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். விடுமுறை வழங்காத அல்லது சம்பளம் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும்” என உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.